Thursday, January 12, 2017

கர்த்தர் தம் நினைவில்

கர்த்தர் தம் நினைவில் வைத்திருக்கிறார்
லூக்கா 1 : 5 – 17
       யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்கள் அது. ரோமர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போதிலும் யூதர்கள் எல்லாரும் மிகுந்த சந்தோஷத்தோடு இருந்தார்கள். ஏனெனில் யூதர்களை பொறுத்தமட்டில் தேவாலயம் என்பது அவர்களுக்கு ஜீவனைப் போன்றது. சாலொமோன் கட்டிய ஆலயம் இடிக்கப்பட்ட பிறகு இரண்டாவது ஆலயத்தை செருபாபேல், எஸ்றா நெகேமியா கட்டி முடித்தார்கள். ஆயினும் சாலொமோனின் ஆலயத்தோடு ஒப்பிடுகையில் இந்த இரண்டாம் ஆலயம் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருந்தது. அப்போது முந்தின சாலொமோனின் ஆலயத்தைப் பார்க்கிலும் இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று தேவன் வாக்குப் பண்ணினார் (ஆகாய் 2 : 1 - 9). தேவனுடைய வாக்குத்தத்தின்   நிறைவேறுதலாக இந்த இரண்டாம் ஆலயத்தை ஏரோது விரிவுபடுத்திக் கட்டினான். யூதர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவன் இப்படிச் செய்தான். சிறந்த பளிங்குக் கற்களால் அது கட்டப்பட்டது (லூக்கா 21 : 5). நாற்பத்தாறு ஆண்டுகள் செலவழித்து மிகப் பிரமாண்டமானதாக அதைக் கட்டினான் (யோவான் 2 : 20).
       தேவாலயம் கட்டப்பட்டபடியால் கர்த்தர் தம்முடைய ஜனத்தை நினைவு கூர்ந்தார்என்று சொல்லி யூதர்கள் மிகுந்த சந்தோஷத்தோடிருந்தார்கள்.. அதிலும் குறிப்பாக ஆசாரியர்களுடைய சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. அப்படி யூதர்களும் ஆசாரியர்களும் சந்தோஷித்துக் களிகூர்ந்த நாட்களில் வாழ்ந்த ஒரு ஆசாரியனுடைய வாழ்க்கையைத்தான் நாம் தியானிக்கப் போகிறோம்.    
       அந்த ஆசாரியனுடைய பெயர் சகரியா. அவருடைய மனைவியின் பெயர் எலிசபெத்து. அவர்களிருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும், ஆசாரியர்களால் உருவாக்கப்பட்டிருந்த சகல நியமங்களின் படியேயும் நடந்து கர்த்தருக்கு முன்பாக குற்றமற்றவர்களாயும் நீதியுள்ளவர்களாயும் காணப்பட்டார்கள்.  ஒருவர் மனிதர்களுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாய் வாழ்வதே கடினம். ஆனால் இவர்களோ மனிதர்களுக்கு முன்பாக மட்டுமல்ல. தேவனுக்கு முன்பாகவும் நீதியுள்ளவர்களாய் காணப்பட்டார்கள்.
       ஆயினும் சகரியா-எலிசபெத்து தம்பதிக்கோ  பிள்ளையில்லை. அவர்களிருவருமே குழந்தை பெற்றுக் கொள்ளுவதற்குரிய வயதையும் கடந்து இனி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பேயில்லை என்கிற அளவுக்கு மிகவும் வயது சென்றவர்களாயுமிருந்தார்கள்.
       இஸ்ரவேலில் பிள்ளை பெறாமலிருப்பது என்பது சாதாரண காரியமல்ல. யூதர்களைப் பொறுத்தமட்டில் சாபங்களில் மிகப் பெரிய சாபம் இதுதான். இஸ்ரவேலில் பிள்ளைப்பேறில்லாத தம்பதியினர் அனுபவிக்கிற நிந்தனைகளுக்கும் அவமானங்களுக்கும் அளவு கிடையாது.
       பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக சகரியா அநீதியுள்ளவன் என்றோ அல்லது எலிசபெத்து அநீதியுள்ளவள் என்றோ குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் வேதமே அவர்களைக் குறித்து சாட்சி கொடுக்கிறது - அவர்களிருவருமே மனுஷருக்கு முன்பாக அல்ல. தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள் (லூக்கா 1 : 6)”
       ஆசாரியனாகிய சகரியாவின் வாழ்க்கையின் சூழ்நிலைகளை சற்றே கவனித்துப் பாருங்களேன். தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டதால் கர்த்தர் நம்மை   நினைவு கூர்ந்தார் என்று சொல்லி யூதர்கள் எல்லாரும் அதிலும் குறிப்பாக ஆசாரியர்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்திருந்த நாட்கள். ஆனால் ஆசாரியனாகிய சகரியாவுக்கோ சந்தோஷமில்லை.
       எல்லாருக்கும் இலகுவாய்க் கிடைக்கிற, இயற்கைக்கயாய் கிடைக்கிற ஆசீர்வாதம்தான். ஆனால் அது ஆசாரியனாகிய சகரியாவுக்கு இன்னும் கொடுக்கப்படவேயில்லை. இதினிமித்தம் இஸ்ரவேலர்களால் சாபமாக எண்ணப்பட வேண்டிய சூழ்நிலை. இப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்ததுண்டா ? எல்லாருக்கும் இலகுவாய்க் கிடைக்கிற ஆசீர்வாதத்துக்காக நீங்கள் பல ஆண்டுகள் காத்திருக்கிற அனுபவம்.
       இன்னும் வேதனைக்குரிய காரியம் என்னவென்றால் வேதத்தின்படி பிரதான ஆசாரியனாகிய ஆரோனின் கால முதல் பிள்ளைப்பேறில்லாத ஆசாரியன் என்று எவருமேயில்லை.  ஒரு சில ஆசாரியர்களுக்கு ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் கூட பெண் பிள்ளைகள் பிறந்திருந்தார்கள். ஆனால் ஆசாரியனாகிய சகரியாவுக்கு பிள்ளைகளே பிறக்கவில்லை. ஆசாரிய வமசத்தின் சரித்திரத்திலேயே இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை.
       தேவாலயத்தில் ஆசாரிய ஊழியஞ்செய்கிற நாட்களில் சகரியா எத்தனையோ பேருக்காக பவநிவாரணபலி, குற்ற நிவாரணபலி முதலான பலிகளைச் செலுத்தியிருக்கிறார். சகரியா பலி செலுத்தி அதன் மூலம் பாவமன்னிப்புப் பெற்று ஆசீர்வாதத்தையும் பெற்றவர்கள் எத்தனையோ பேர். சகரியாவால் அநேகர் ஆசீவதிக்கப்பட்டிருக்க தனக்கென்று சகரியா கேட்ட ஒரு ஆசீர்வாதம் இதுவரை அவருக்குக் கொடுக்கப்படவேயில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையை  நீங்கள் அனுபவித்ததுண்டா ? நீங்கள் ஜெபித்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், உங்களால் ஆசீர்வாதம் பெற்றவர்கள் அநேகர். ஆனால் உங்களுக்கென்று நீங்கள் கேட்ட ஆசீர்வாதம் இன்னும் கொடுக்கப்பட்டிருக்காது. இதுதான் சகரியாவினுடைய சூழ்நிலையும்.
       இப்படிப்பட்ட தருணத்திலும் கூட ஆசாரியனாகிய சகரியா தன்னுடைய நீதியைவிட்டு பிறழவும் இல்லை. தேவனைவிட்டு பின்வாங்கவும் இல்லை.  அவர் தனது ஆசாரிய ஊழியத்தையும் நிறைவேற்றி வந்தார். அப்போது என்ன நடந்தது ?
       அதை அறிந்து கொள்ள அந்நாட்களில் இருந்த ஆசாரிய ஊழியத்தின் முறைமையைச் சற்றே விளங்கிக் கொள்வது நல்லது. ஆசாரியர்கள் இருபத்துநான்கு வகுப்புகளாக (Divisions) பிரிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் இருநூறு முதல் ஆயிரம் ஆசாரியர்கள் வரை இருந்தார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு வாரம் (ஒரு ஓய்வு நாள் துவக்கி மறு ஓய்வுநாள் வரை) என முறை வைத்து ஊழியஞ் செய்வார்கள்.   
         அவ்வாரத்தில் ஊழியஞ் செய்யப் போகிற   ஆசாரியர்கள் ஓய்வு நாளின் அதிகாலை வேளையிலேயே எருசலேம் தேவாலயத்துக்கு வந்து விடுவார்கள். அதிகாலை மூன்று மணிக்கு ஒரு எக்காளம் ஊதப்படும். அப்போது அந்த வகுப்பின் ஆசாரியர்கள் ஆசாரியர்களின் மண்டபத்திற்கு கூடி வர வேண்டும். அங்கு அவர்களுக்கு ஆசாரிய வஸ்திரம் தரிப்பிக்கப்படும். பின் காலை ஆறு மணிக்கு வெள்ளி எக்காளம் ஊதப்படும். அப்போது ஆசாரியர்கள் தேவாலயத்துக்கு வெளியே பிரகாரத்தில்  இருக்கிற பலிபீடத்தண்டைக்கு கூடிவருவார்கள். பலிபீடத்தைச் சாம்பலற கழுவி சுத்திகரித்து அதை ஆயத்தபடுத்துவார்கள்.
       ஓய்வு நாள் என்பதால் தேசத்து ஜனங்கள் எல்லாரும் காலமே எருசலேம் தேவாலயத்துக்கு கூடி வருவார்கள். காலை ஒன்பது மணிக்கு காலைப் பலி செலுத்தப்படும். பலி செலுத்தப்பட்டவுடன் தேவாலயத்தின் ஆராதனை ஒழுங்குகள் துவங்க ஆரம்பிக்கும்.
       பழைய ஏற்பாட்டு நாட்களில் தேவாலயத்துக்குள் எல்லாரும் சென்றுவிடமுடியாது. பொது ஜனங்களோ அல்லது மற்ற யாருமோ தேவாலயத்துக்குள் பிரவேசிக்க அனுமதி கிடையாது. தேவாலயத்துக்குள் சென்று ஆசாரிய ஊழியஞ் செய்கிறதற்காக வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டு குலுக்கிப் போட்டு அதிலிருந்து மூன்று ஆசாரியர்களை தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் மாத்திரமே தேவாலயத்துக்குள் பிரவேசித்து ஊழியம் செய்ய முடியும்.
       சீட்டுப் பெற்ற அந்த மூன்று ஆசாரியர்களில் முதல் சீட்டைப் பெற்றவர் பரிசுத்த அப்பங்களை அடுக்க வேண்டும். இரண்டாம் சீட்டை பெற்றவர் குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். மூன்றாம் சீட்டைப் பெற்றவர் தூபங்காட்ட வேண்டும். குறிப்பாக தூபங்காட்டுகிற போது ஜெபம் செய்தால் அந்த தூபபுகை எழும்புகிறபோது அதனோடு சேர்ந்து தங்கள் ஜெபமும் தேவ சமூகத்துக்கு செல்லும் என்பது யூதர்களின் நம்பிக்கை. எனவே தூபங்காட்டுகிற சீட்டு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.
       தேவாலயத்துக்குள் பிரவேசித்து பணிசெய்வது என்பது ஆசாரியர்களால் மிகவும் மேன்மையானதாகக் கருதப்பட்டது. ஒரு முறை ஒரு ஆசாரியன் தேவாயத்திற்குள் பிரவேசித்து பணி செய்துவிட்டால் அத்துடன் அவருக்கு ஓய்வு (Retirement) அளிக்கப்படும். பின் அவர் தேவாலயத்தின் எந்தப் பணியிலும் ஈடுபடவே முடியாது.  இதுதான் ஆசாரிய ஊழிய முறைமை.
       அபியா என்கிற வகுப்பு ஆசாரிய ஊழியஞ் செய்ய வேண்டிய வாரம். சகரியாவும் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்தான். அதிகாலையிலேயே சகரியா தேவாலயத்துக்கு வந்திருந்தார். அங்கு ஏராளமான ஆசாரியர்கள் குழுமியிருந்தார்கள். எக்காளம் ஊதப்பட்டவுடன் ஆசாரிய மண்டபத்திற்கு வந்தார்கள். அவர்கள் எல்லாருக்கும் ஆசாரிய வஸ்திரம் தரிப்பிக்கப்பட்டது. பின் வெள்ளி எக்காளம் ஊதப்பட்டவுடன் பலிபீடத்தண்டை சென்று அதை ஆயத்தப்படுத்தினார்கள். காலை ஒன்பது மணிக்கு காலை பலியோடு ஆராதனை ஒழுங்குகள் ஆரம்பித்தன. ஓய்வுநாள் என்பதால் தேசமே அங்கு கூடி வந்திருந்தது. ஆசாரியர்கள் எல்லாரும் கூடி வந்திருக்கிறார்கள்.
       இப்போது தேவாலயத்துக்குள் பிரவேசித்து பணி செய்வதற்காக மூன்று ஆசாரியர்களை தெரிவு செய்ய வேண்டிய நேரம். பிரதான ஆசாரியன் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த ஆசாரியர்களின் பெயர்களை சீட்டெழுதி குலுக்கினார். அதில் இருந்து மூன்று ஆசாரியர்களின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் முக்கியமான சீட்டாக கருதப்பட்ட தேவாலயத்துக்குள் பிரவேசித்து தூபங்காட்டுகிற சீட்டு சகரியா பெயருக்கு விழுந்தது (லூக்கா 1 : 9).
        முதல் சீட்டைப் பெற்ற ஆசாரியன் தேவாலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டிய நேரம். அவர் பலிபீடத்தண்டை வருகிறார். அங்கு பிரதான ஆசாரியன் ஆயத்தமாக காத்திருக்கிறார். அவருடைய கையில் பெரிய பொன் தட்டில் பன்னிரண்டு அப்பங்கள், அவைகளை அடுக்க கிண்ணங்கள், பழைய அப்பங்களை எடுக்க பொன் தட்டுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வயதான ஆசாரியன் இவ்வளவையும் எடுத்துக் கொண்டு தேவாலயத்துக்குள் பிரவேசிப்பது கடினம் ஆகையால் அந்த ஆசாரியன் உதவிக்கு தன் குமாரனை அழைத்துக் கொண்டு உள்ளெ செல்ல அனுமதியுண்டு. இது அந்தக் குமாரன் பின்னாட்களில் ஊழியம் செய்வதற்காக அவனுக்கு கொடுக்கப்படும் பயிற்சி. முதல் ஆசாரியன் அளவில்லா சந்தோஷத்துடன் தன் குமாரனுடன் உள்ளே சென்று அப்பங்களை அடுக்கி தன் பணியை நிறைவேற்றித் திரும்பினார்.
       இரண்டாம் சீட்டைப் பெற்ற ஆசாரியன் பிரதான ஆசாரியனிடம் சென்றார். அவருடைய கரத்தில் பொன் பாத்திரத்தில் ஒலிவ எண்ணெய், திரி, பலிபீடத்தில் இருந்து எடுக்கபட்ட நெருப்பு, பழைய எண்ணெயையை எடுக்க பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. அவரும் தன் குமாரனை அழைத்துக்கொண்டு சந்தோஷத்துடன் தேவாலயத்துக்குள் பிரவேசித்தார். குத்துவிளக்கை ஏற்றி தன் ஊழியத்தை நிறைவேற்றித் திரும்பினார்.
       மூன்றாவது சீட்டான தூபங்காட்டுகிற சீட்டைப் பெற்றவர் சகரியா. இப்போது சகரியாவின் முறை. சகரியா பலிபீடத்தண்டை பிரதான ஆசாரியனிடம் சென்றார். பிரதான ஆசாரியனிடம் பொற்பாத்திரத்தில் தூப வர்க்கம், நெருப்புத் துண்டுகள், சாம்பல் எடுக்க பாத்திரங்கள், கரண்டிகள் எல்லாமிருந்தன. பிரதான ஆசாரியன் சகரியாவைப் பார்த்துக் கேட்டார் நீதிமானாகிய சகரியாவே உன் குமாரன் எங்கே ?”
       சகரியாவின் இந்தச் சூழ்நிலையை கவனித்துப் பாருங்கள். எல்லாருடைய கண்களும் இப்போது சகரியாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜனங்கள் என்ன பேசியிருப்பார்கள். என்ன பாவம் செய்தானோ? ஆசாரிய ஊழியத்தில் இவனுக்கு உதவி செய்யக் கூட இவனுக்கு குமாரன் இல்லையே?”. ஏச்சுக்கும் பேச்சுக்கும் அளவே இல்லை. சமஸ்த இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாகவும் சக ஆசாரியர்களுக்கு முன்பாகவும் அவர் பட்ட அவமானங்கள், அடைந்த வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல.
       அவர் அந்த பொருட்களையெல்லாம் தன்னந்தனியனாய் எப்படி எடுத்துக் கொண்டு சென்றாரோ தெரியவில்லை. அந்த வயதான மனிதர் அவரே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தேவாலயத்தின் படிகளில் தள்ளாடித் தள்ளாடி ஏற ஆரம்பித்தார். தேவாலய படிக்கட்டுகளில் நிற்கிற லேவியர்கள் அல்லேலூயா என்கிற கோரசை எல்லாரும் சத்தமாய் பாட ஆரம்பிக்கிறார்கள். தேவாலயத்தின் பிரமாண்டமான பொன் கதவுகள். அதைத் திறந்துவிடக்கூட ஆளில்லை. யாரும் வரவுமாட்டார்கள். தேவசமூகத்துக்குள் அத்துமீறி நுழைதால் மரிக்க வேண்டியிருக்கும் என்ற பயம். அவரே கதவைத் திறந்து நுழைந்து உள்ளே பிரவேசித்தார். வாசல் கதவை அடைத்து விட்டு தூப பீடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். குத்து விளக்கின் மெல்லிய வெளிச்சம் ஆலயம் முழுவதும் பரவியிருந்தது. மெல்ல தேவன் வீற்றிருக்கிற மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு மிக அருகே, மிக நெருக்கமாக இருக்கிற தூப பீடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
       அவருடைய உள்ளம் எவ்வளவு பாடுபட்டிருக்கும்?  “ஆண்டவரே எத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பு? எல்லாருக்கும் இலகுவாய்க் கிடைக்கிற ஆசீர்வாதத்திற்காக நான் எத்தனை ஆண்டுகளாய் காத்திருக்கிறேன்? அது இன்னும் எனக்கு அருளப்படவில்லையே? நான் என்ன தவறு செய்தேன் ? நான் என்னுடைய சொத்துகளை ஆண்டு அனுபபிக்க எனக்கு பிள்ளை கேட்கவில்லை. என்னுடைய ஆசாரிய ஊழியத்தில் எனக்கு உதவி செய்ய ஒரு சிறு பிள்ளை. என்னுடைய ஆசாரிய அபிஷேகத்தைப் பெறுவதற்கு ஒரு பிள்ளை. ஆனால் அது இன்னும் எனக்கு கொடுக்கப்படவேயில்லையே.  அப்படி நீர் கொடுத்திருந்தால் அவனை என்னைப் போலவே நீதிமானாக வளர்த்திருப்பேனே ? எத்தனை வாக்குத் தத்தங்கள் கொடுத்தீர் ? அவைகளெல்லாம் என்னவாயிற்று ? என்னிமித்தம் எத்தனையோபேர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க நான் கேட்ட ஒரே ஒரு ஆசீர்வாதம் எனக்குக் கொடுக்கப்படவில்லையே ? இஸ்ரவேலையே நினைவு கூர்ந்தீர் ஆனால் என்னை இதுவரை நினைவுகூரவேயில்லையே ?” எவ்வளவு புலம்பல்கள் ? எவ்வளவு  ஏக்கங்கள் ?
       நேராய் தூபபீடத்தை அவரே தனி ஒருவராய் அதைச் சாய்த்து அதைச் சுத்தம் செய்தார். அதன் மீது நெருப்புத் தழல்களை அடுக்கினார். தூபவர்க்கத்தை கரத்தில் எடுத்தார். தூபங்காட்டுகிறபோது ஜெபிப்பதற்காக வெளியே ஜனங்கள் ஆயத்தமாய்க் காத்திருந்தார்கள்.
       தூபபீடத்தின்மேல் தூபவர்க்கத்தைப் போட ஆரம்பித்தார். தூபப் புகை மேலெழும்ப ஆரம்பித்தது. ஆண்டவரே, எல்லாம் முடியப் போகிறது. இன்னும் சில விநாடிகளில் நான் உம்முடைய சமுகத்தை விட்டுச் செல்லப் போகிறேன். இனி நான் இங்கு வர முடியாது. இதோ இந்த தூப புகையிலே எத்தனையோ பேருடைய ஜெபங்கள் உம் சமுகத்தை வந்து எட்டப் போகிறது. ஆனால் என்னுடைய ஜெபங்கள் ஒன்று கூடவா உம்முடைய சமுகத்துக்கு வரவேயில்லை. இஸ்ரவேலே கர்த்தர் தங்களை நினைவு கூர்ந்தார் என்று சந்தோஷப்பட்டுக் களி கூருகிறதே. ஆனால் கர்த்தர் என்னை நினைவு கூரவேயில்லையே ?” தூபப் புகை எழும்பினதோ இல்லையோ சகரியாவின் இருதயத்தின் பெருமூச்சு மேலெழும்ப ஆரம்பித்தது.
       அப்போது ஒரு சம்பவம் நடந்தது. கர்த்தருடைய தூதன் தூபபீடத்தின் வலது புறத்திலே நின்று சகரியாவோடு பேசினார். சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக” (லூக்கா 1 : 13) என்று திருவுளம்பற்றினார்
        லூக்கா 1:13 ஐ சற்றே உற்றுக் கவனித்துப் பாருங்களேன். இந்த ஒரே வசனத்தில் சகரியாவின் முழுக்குடும்பத்தின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது. அதில் சகரியாவின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேருடைய பெயர்களும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அவை சகரியா {தகப்பன்}, எலிசபெத்து {தாய்}, யோவான் {குமாரன்}. இதன் தாற்பரியம் என்ன ? சகரியா என்பதற்கு கத்தர் தம் நினைவில் வைத்திருக்கிறார்என்றும், எலிசபெத்து என்பதற்கு தேவனுடைய வாக்குத்தத்தங்கள்என்றும், யோவான் என்பதற்கு கிருபையாய்க் கொடுக்கிறார்என்றும் அர்த்தமாகும்.
       இந்த மூன்று அர்த்தங்களையும் இணைத்து வாசித்துப் பாருங்கள் கர்த்தர் தம் நினைவில் வைத்திருக்கிறார் – {எதை?} தேவனுடைய வாக்குத்தத்தங்களை - ஆகையால் அவர் என்ன செய்யப் போகிறார் ? அவர் அதை கிருபையாய்க் கொடுக்கிறார்.
       இன்றைக்கு எத்தனைபேர், நம்மில் எத்தனைபேர் சகரியாவின் வாழ்க்கைச் சூழ்நிலையில் இருக்கிறீகள் ? நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கேட்ட ஒரு ஆசீர்வாதம் இன்னும் உங்களுக்கு அருள் செய்யப்படவில்லை. எல்லாருக்கும் இலகுவாய்க் கிடைக்கிற ஆசீர்வாதத்துக்காக நான் பல ஆண்டுகள் காத்திருக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் எல்லாம் என்னவாயிற்று ? என்னுடைய காத்திருப்பு என்றைக்கு முடியப்போகிறது ? என்கிற கேள்விகளோடு உங்கள் உள்ளம் கலங்குகிறதோ ?
       எனக்கன்பான தேவப்பிள்ளையே கலங்க வேண்டாம். இந்த வாக்குத்தத்தங்களின் மாதத்தில் கர்த்தர் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறார். உங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த வாக்குத்தத்தங்களையும் கர்த்தர் மறக்கவில்லை. நீங்கள் இரட்சிக்கப்பட்ட நாள் துவக்கி இந்த நாள் மட்டும் அவர் உங்களுக்கு கொடுத்த எல்லா வாக்குத்தத்தங்களையும் அவர் நினைவில் வைத்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் உங்களுடைய நீதியைப் பார்த்து அல்ல. தம்முடைய கிருபையினிமித்தம் அவைகளை உங்களுக்குக் கொடுக்கப்போகிறார்.
       ஒரு சாதாரணக் குழந்தையை சகரியாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் நினைத்திருந்தால் அதைக் கர்த்தர் என்றைக்கோ கொடுத்திருப்பார். ஆனால் கர்த்தர் சகரியாவுக்கு கொடுக்க நினைத்தது அசாதாரணமான காரியம். ஸ்திரீகளுக்குள் பிறந்தவர்களுக்குள் யோவான்ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனுமில்லையே. ஆம். கர்த்தர் உங்களுக்கு கொடுக்க நினைப்பது சாதாரண காரியமல்ல. ஒரு மாபெரும் காரியத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.

       உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை நீங்கள் மறந்திருந்தால் கூட அவர் மறக்கவில்லை. காத்திருங்கள். உங்களுக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும்.

Sunday, January 8, 2017

கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி

மந்தையின் துருக்கம்
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே அவதரித்த முதல் கிறிஸ்துமஸ் தினமான அன்றைய இரவு நடந்த காரியங்களை நாம் தியானிக்கலாம்.
       கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசம் ரோமர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாட்கள் அது. யூத மக்களின் வாழ்க்கை நிலை வித்தியாசமானது. யூத சமுதாயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்ட தருணம். நாம் வாழும் இந்த நாட்களில் பணம் பதவி, அதிகாரம் இவற்றை வைத்துதான் மதிப்பு மரியாதை எல்லாமே. ஆனால் யூத சமுதாயம் முற்றிலும்  வித்தியாசமானது. எப்படியென்றால் யூதர்களைப் பொறுத்தமட்டில் நியாயப்பிரமாணம் அவர்களின் ஜீவனைப் போன்றது. ஒருவர் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்கிறதில் எவ்வளவு வைராக்கியம் காட்டுகிறாரோ அந்த அளவுக்குத்தான் மதிப்பு மரியாதை எல்லாமே. அந்த விதத்தில் நியாயப்பிரமாணங்களை அதிகமாய் கடைபிடித்தவர்கள் ஆசாரியர்கள் தான். ஆகையால் சமூகத்தின் உச்சபட்ச மதிப்ப்போடும், அதிகாரங்களோடும் வாழ்ந்தவர்கள் ஆசாரியர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள் தேவாலயத்தில் அதிகாரம் படைத்தவர்களாயிருந்த சதுசேயர்கள். அதற்கடுத்த நிலையில் யூத ஜெப ஆலயங்களில் அதிகாரம் பெற்றிருந்த பரிசேயர்கள். அதற்கடுத்த நிலையில் வேதபாரகர்கள் என்று சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
       இதில் சமூகத்தின் கடைநிலையில் வாழ்ந்தவர்கள் மேய்ப்பர்கள். அந்த மேய்ப்பர்களைக் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம். அந்நாட்களில் மேய்ப்பர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது. யூத மக்கள் யாவராலும் புறக்கணிக்கப்பட்டுகீழானவர்களாய், தீழ்ப்பானவர்களாய், தீட்டானவர்களாய் கருதப்பட்டவர்கள் மேய்ப்பர்கள். ஒட்டு மொத்த யூத சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தது. ஏனென்று சொன்னால் நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தால் மட்டுமே யூதர்களிடம் கனத்தைப் பெற முடியும். ஆனால் மேய்ப்பர்களால்  யூதர்களின் நியாயப்பிரமாணத்தை எந்தவிதத்திலும் கடைபிடிக்க முடிவதில்லை. யூதர்களின் பிரமாணத்தின்படி ஒருநாளில் இரண்டு தரம் ஸ்நானம் பண்ண வேண்டும். ஆனால் தங்கள் மந்தைகளை மேய்த்துக் கொண்டு காடு மேடெல்லாம் அலைகிற மேய்ப்பர்களுக்கு இது சாத்தியமில்லை. மேலும் யூதர்களின் பிரமாணத்தின்படி மரித்துப்போன எதையும் தொடக்கூடாது. அப்படித் தொட்டால் அவர்கள் தீட்டானவர்களாய் கருதப்படுவார்கள். மேய்ப்பர்கள் காடுமேடெல்லாம் அலைகிறபடியால் இறந்து போன எதையாகிலும் மிதித்துவிடுவார்கள். ஆடுகள் ஏதாகிலும் மரித்துப்போனால் அதை அப்புறப்படுத்த அதை தூக்க வேண்டியிருக்கும். இப்படி யூதர்களின் பிரமாணத்தை எந்தவிதத்திலும் மேய்ப்பர்களால் கடைபிடிக்க முடிவதில்லை. ஆகையால் யூத சமுதாயமே அவர்களை ஒதுக்கி வைத்திருந்தது.  புறக்கணித்து வந்தது. மேய்ப்பர்கள் சமூகத்தின் மிக கீழான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
       மேய்ப்பர்கள் பட்ட அவமானங்களுக்கும், நிந்தனைளுக்கும் அளவு கிடையாது. யூதர்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் எந்த விசேஷ வைபவங்களுக்கும், நல்ல காரியங்களுக்கும் மேய்ப்பர்களை அழைக்கவே மாட்டார்கள். காரணம் மேய்ப்பர்கள் தீட்டானவர்களாய் கருதப்பட்டபடியால்  அவர்கள் யாரையாகிலும் தொட்டால் அவர்களும் தீட்டுப்படுவார்கள் என்பதால் யாரும் அவர்களை திருமண நிகழ்ச்சி போன்ற எந்தக் காரியங்களுக்கும் அவர்களை அழைக்கவே மாட்டார்கள். விருந்து, பண்டிகை போன்ற எதற்குமே அவர்களை அழைக்கவே மாட்டார்கள். நல்ல செய்தி என்று எதையுமே மேய்ப்பர்கள் கேள்விப்பட்டது கிடையாது. இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா ? நல்ல செய்தி என்ற ஒன்றை அவர்கள் கேள்விப்பட்டதே கிடையாது. ஆனால் கர்த்தரோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிற நற்செய்தியை மேய்ப்பர்களிடத்தில்தான் முதலாவது அறிவித்தார்.
        இந்த மேய்ப்பர்கள் யூதர்களால் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலையிலும் யூதர்களுக்கு பல வழிகளில் உதவி செய்து வந்தார்கள். எப்படியென்றால்   யூதர்கள் தேவாலயத்தில் பலி செலுத்துவதற்குத் தேவையான ஆடுகளை அதிலும் விசேஷமாய் முதற்பேறான ஆடுகளை பழுதற்றதாக பராமரித்து கொடுப்பவர்கள் இந்த மேய்ப்பர்கள்தான். மேய்ப்பர்கள் பழுதற்றதென்று சான்று கொடுத்தால் மாத்திரமே அந்த ஆட்டுக்குட்டி தேவாலயத்தில் பலியாக அங்கிகரிக்கப்படும். இப்படி பழுதற்ற முதற்பேறான ஆடுகளை பாராமரிப்பதற்கென்றே மேய்ப்பர்கள் மந்தையின் துருக்கம் என்ற ஒரு இடத்தை வைத்திருந்தார்கள். கல்லுகளை ஒன்றன் மீது ஒன்று வைத்து கோபுரம் போலக் கட்டப்பட்டிருக்கும். அதன் மேலேறி நின்று தூரத்தில் இருந்து கரடி போன்ற விலங்குகளோ அல்லது திருடர்களோ வருகிறார்களா என்று பார்ப்பார்கள். அந்த மந்தையின் துருக்கத்தைச் சுற்றிலும் ஆடுகள் மற்றும் மற்ற கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு ஒரு மாட்டுத்தொழுவம் போன்றே அது காட்சியளிக்கும்.  அந்த மந்தையின் துருக்க கோபுரத்தின் அடியில் ஒரு அறை ஒன்று இருக்கும். அந்த அறை எதற்கென்றால் ஒரு ஆட்டுக் குட்டி கர்ப்பந்திறந்து  முதன்முறையாக குட்டியை ஈனப்போகிறது என்றால் அதை அந்த மந்தையின் துருக்கத்துக்கு கொண்டுவந்துவிடுவார்கள். அதை கொண்டுவந்து அது தன் முதற்பேறான குட்டியை ஈன்றவுடன் அதை பெற்று, அது அங்குமிங்கும் துள்ளும்போது காயமேதும் ஏற்படாதவண்ணம் அதை துணிகளில் சுற்றிவிடுவார்கள். அதை துணிகளில் சுற்றியபின் மந்தையின் துருக்கத்தில் இருக்கும் சுண்ணாம்பினால் செய்யப்பட்ட ஒரு குழி போன்றதோர் தொட்டியில் கிடத்திவிடுவார்கள். அந்தக் குழிக்கு முண்ணனை என்று பெயர். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றால் அந்தக் குழி சுண்ணாம்பினால் செய்யப்பட்டிருப்பதால் அந்த ஆட்டுக் குட்டிக்கு நீண்ட நாட்களுக்கு வியாதி என்பதே வராது. அந்த முன்னனையில் கிடத்தின பிற்பாடு அதைச் சோதித்துப் பார்ப்பார்கள். அதன் பற்கள், காது மடல், கால்கள் என எல்லாவற்றையும் சோதித்துப் பார்ப்பார்கள். அந்த ஆட்டுக்குட்டி எந்த ஊனமும் இல்லாமல் பழுதற்றதாக பிறந்திருந்தால் மேய்ப்பர்கள் அடைகிற சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. உடனே அவர்கள் சந்தோஷமாய் பாட ஆரம்பித்து விடுவார்கள். மந்தையின் துருக்கத்தில் இருந்து பாடல் சத்தம் கேட்டாலே யூதர்கள் அத்தனைபேருக்கும் தெரியும் மந்தையின் துருக்கத்தில் தேவாலயத்தில் பலியிடப்படுவதற்கென்றே ஒரு பழுதற்ற முதற்பேறான ஆட்டுக்குட்டி பிறந்திருக்கிறது என்று!
.
       இன்னொரு விதத்திலும் மேய்ப்பர்கள் யூதர்களுக்கு உதவினார்கள். எப்படியெனில் நியாயப்பிரமாணத்தின்படி ஒரு ஸ்திரீ இரத்தத்தினால் தீட்டுப்படுகிறபோது அவள் இருக்கிற மனையையோ அல்லது அந்த வீட்டில் இருக்கிற பொருள்களையோ யாரும் தொடக்கூடாது. அப்படித்தொட்டால் அவர்களும் தீட்டுப்பட வேண்டியிருக்கும் (லேவி 15) ஆகையால் ஒரு ஸ்திரீ இரத்தத்தினால் தீட்டுப்படுகிறபோது அந்த வீட்டிலிருக்கிற யாவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து வீட்டிற்கு வெளியே கூடாரமிட்டுத் தங்குவார்கள். ஆனால் அவ்வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் என பலர் இருந்து அந்த ஒரு ஸ்திரீயினிமித்தம் அவ்வீட்டிலிருக்கிற அத்தனை பேரும் வெளியேற முடியாத சூழல் இருந்தால் அந்த ஸ்திரீயை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். அவள் வீட்டைவிட்டு எங்கு போக முடியும்? அவளை நேராக மந்தையின் துருக்கத்திற்கு அனுப்பி விடுவார்கள். அவளுடைய தீட்டின் நாட்கள் நிறைவேறும் வரை அவளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு மேய்ப்பர்களுடையது. அப்படியானால் அந்த ஸ்திரீயினிமித்தம் மேய்ப்பர்கள் தீட்டுப்படமாட்டார்களா என்றால் யூதர்களைப் பொறுத்தமட்டில் மேய்ப்பர்கள் தீட்டானவர்கள்தானே ஆகையால் அவர்களுக்கு பிரச்சினை ஒன்றுமில்லை.
       இப்பொழுது யோசேப்பு - மரியாளின் காரியத்துக்கு வருவோம். குடிமதிப்பு எழுதுவதற்காக யோசேப்பும் மரியாளும் நாசரேத்திலிருந்து பெத்லெகேமுக்குப் போனார்கள். அவ்விடத்துக்கு அதாவது பெத்லெகேமுக்கு போய் அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில் அவ்விடத்திலே அதாவது பெத்லகேமிலே இருக்கையில் மரியாளுக்கு பிரசவ காலம் நேரிட்டது.(லூக்கா 2 : 6). அவர்கள் பெத்லகேமிலே இருந்தார்கள் என்றால் அவர்களுக்கென்று வீடு இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆம். யோசேப்புக்கு வீடு இல்லாமலில்லை. வீடெல்லாம் இருந்தது. யோசேப்பு ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. தாவீதின் வம்சத்தில் வந்த ராஜ பரம்பரை. வீடு இருந்தது. இஸ்ரவேலில் யாரும் சொத்துகளை அறுதியிட்டு விற்க முடியாது.  ஆனால் என்ன ஒரு காரியம் - இப்போது சொத்திற்கு பங்காளிகள் அநேகர் இருக்கிறார்கள். 
    
       வீடு முழுவதும் குடிமதிப்பு எழுதுவதற்காக வந்த தாவீதின்  வம்சத்தாரால் நிறைந்திருக்கிறது. அப்போது மரியாளுக்கு பிரசவ காலம் நேரிட்டது. பிரசவத்தின் போது மரியாள் இரத்தத்தினாலாகிய தீட்டுப்படுவாள். அப்போது அந்த வீட்டில் இருக்கிற அத்தனை பேரும் மரியாளால் தீட்டுபட வேண்டியிருக்கும். ஆகையால் அவ்வீட்டிலிருக்கிற அத்தனைபேரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழல். ஆனால் அவள் ஒருத்தியினிமித்தம் அத்தனைபேரும் வெளியேற வாய்ப்பில்லை. ஆக மரியாளைத்தான் வெளியே அனுப்ப வேண்டும். எங்கே அனுப்புவது? மந்தையின் துருக்கத்துக்கு. குழந்தையைப் பெற்றெடுக்க தனித்த இடம் இல்லாதபடியினால் (கிரேக்கத்தில் கட்டலுமா” Kataluma – என்பதற்கு மேல்வீட்டறை என்று அர்த்தம். அது இங்கு சத்திரம் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது).
       மரியாளை மந்தையின் துருக்கத்திற்கு அனுப்பினார்கள். அவள் தன் முதற்பேறான குழந்தையைப் பெற்று குழந்தையை துணிகளில் சுற்றி முன்னனையிலே கிடத்தினாள்.  மரியாள் ஈன்றெடுத்திருக்கிற இந்த முதற்பேறான ஆட்டுக்குட்டி பழுதற்றதா என்பதை யார் சோதிக்க வேண்டும்? மேய்ப்பர்கள்தானே. அவர்கள் சோதித்துப் பார்த்தால்தான் இந்த இயேசு என்கிற ஆட்டுக்குட்டியை உலகத்தின் பாவத்திற்காக தேவாலயத்தில் பலியிட முடியும். ஆகையால்தான் தூதர்கள் முதலாவது மேய்ப்பர்களிடத்தில் போய் அறிவித்தார்கள். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். (லூக்கா 2 : 11-12)
        இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் இதற்கு முன்பும் எத்தனையோ ஸ்திரீகள் மந்தையின் துருக்கத்துக்கு வந்து தங்கள் குழந்தைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகளைப் பற்றியெல்லாம்  தூதன் ஒன்றும் சொல்லவில்லை. ஏன் தெரியுமா? அந்தக் குழந்தைகள் எல்லம் வாழ்வதற்கென்றே பிறந்த குழந்தைகள். ஆனால் இயேசு என்கிற இந்த ஒரு குழந்தைதான் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பதற்கென்றே பிறந்த குழந்தை. ஆகையால் தூதன் மேய்ப்பர்களிடத்தில் போய் அறிவித்தான்.
       மேய்ப்பர்கள் வந்தார்கள். பார்த்தார்கள். சந்தோஷமாய் பாட ஆரம்பித்தார்கள். அவர்கள் பாட ஆரம்பித்தார்கள் என்றாலே என்ன அர்த்தம்? மந்தையின் துருக்கத்தில் முன்னனையிலே கிடத்தப்பட்டிருக்கிற இயேசு என்கிற இந்த ஆட்டுக்குட்டி முழு உலகத்தின் பாவத்தையும் சுமந்து தீர்ப்பதற்காக பழுதற்றதாய்ப் பிறந்திருக்கிறது என்பதுதான்!
        மேய்ப்பர்களைப் பொறுத்தமட்டில் தாவீது ராஜாதான் விருப்பமானவர். மேய்ப்பர்கள் தாவீது ராஜாவைக்குறித்து அடிக்கடி பாடுவது உண்டு. தாவீது ராஜாவைப் பார்த்தால் அவரோடு சேர்ந்து நானும் இப்படிப் பாடுவேன் அப்படிப் பாடுவேன் என்று பாடுவார்கள். தாவீது ராஜாவை அவர்கள் கண்கள்  கண்டதோ இல்லையோ. இராஜாதி ராஜாவை அவர்கள் கண்கள் கண்டது.
     இதை கர்த்தருடைய வேதத்தில் இருந்து விளக்கமாய்ப் பார்க்கலாம். மீகா புஸ்தகத்தில் ஏழு அதிகாரங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு அதிகாரத்திலும் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பை குறித்து ஒரு முன்னறிவிப்பு இருக்கிறது. அவைகளை வரிசையாகப் பார்க்கலாம். முதல் அதிகாரத்தில் அவர் வானத்திலிருந்து இறங்கிவரப்போகிறார்.(மீகா 1 : 3). அவர் எப்படிப்பட்டவராக வரப்போகிறார்? ராஜாவாக வரப்போகிறார் (மீகா 2 : 13). ராஜாவாக வரப்போகிறவர் என்ன செய்யப்போகிறார்? யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க வருகிறார் (மீகா 3 : 8). வருகிறார் என்றால் எங்கேவந்து பிறக்கப் போகிறார்? மந்தையின் துருக்கத்துக்கு(மீகா 4 :8). மந்தையின் துருக்கமென்றால் எங்கே உள்ள மந்தையின் துருக்கம்? பெத்லெகேமிலுள்ள மந்தையின் துருக்கம்(மீகா 5 : 2). பெத்லெகேமிலுள்ள மந்தையின் துருக்கத்தின் விசேஷம் என்ன? அதில் பிறக்கிற ஆட்டுக்குட்டிகள் முதற்பேறான ஆட்டுக்குட்டிகள் (மீகா 6 : 7). பெத்லகேமிலுள்ள மந்தையின் துருக்கத்தின் விசேஷம் என்ன? அது என்ன செய்யப் போகிறது? உலகத்தின் பாவத்தை அடக்கிப்போட வருகிறது (மீக 7 : 19)  கர்த்தருடைய பிறப்பின் இரகசியத்தை இப்பொழுது அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.  
         எனக்கன்பான தேவப்பிள்ளையே, சொந்தக் குடும்பத்தில் உள்ளவர்களால், உறவினர்களால், சக மனிதர்களால் அல்லது சக ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்டு வேதனைகளும் வருத்தங்களும் நிறைந்தவர்களாய் காணப்படுகிறீர்களோ? ஏன் என்னைப் புறக்கணிக்கிறார்கள் என்றே தெரியாமல் தவிக்கிறீர்களோ? புறக்கணிப்பால் ஏற்பட்ட காயங்கள் ஆற்ற முடியாத்தாய் இருக்கிறதோ? கலங்க வேண்டாம். மனிதர்களின் புறக்கணிப்பில் இருந்துதான் தேவனுடைய அங்கீகாரமே ஆரம்பமாகிறது. மனிதர்கள் உங்களை புறக்கணிக்கிறார்கள் என்று சொன்னால் உத்தரவாதம் பண்ணிக்கொள்ளுங்கள் - பரலோகம் உங்களை அங்கீகரிக்க ஆரம்பித்து விட்டதென்று. கிறிஸ்து பிறந்த நாட்களில் யூத சமுதாயமே மேய்ப்பர்களைப் புறக்கணித்தது. ஆனால் அப்படிப் புறக்கணிக்கப்பட்ட அந்த மேய்ப்பர்களைப்பற்றி பேசாத கிறிஸ்துமஸ் ஆராதனை இல்லை. கர்த்தருடைய மகிமை உங்களைச் சுற்றிலும் பிரகாசிக்கும் நாட்கள் வரும்.  யார் யாரெல்லாம் உங்களைப் புறக்கணித்தார்களோ அவர்களெல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் உங்களை கனப்படுத்தும் நாட்கள் வரும்.  Article By: Bro.J